×

கடந்த 6 ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் இருந்த 275 பெண்கள் பலாத்காரம்: தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்

புதுடெல்லி: கடந்த 6 ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் இருந்த போது 275 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வேலியே பயிரை மேயும் கொடுமைக்கு பாலியல் பலாத்காரம் மட்டும் விதிவிலக்கல்ல. குடும்ப வன்முறை, கடத்தல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பு தேடியோ அல்லது வேறு விவகாரங்களுக்காகவோ போலீஸ் கஸ்டடியில் எடுக்கப்படும் சமயத்திலும் கூட சில பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்.

இதுதொடர்பாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த 2017 முதல் 2022ம் ஆண்டு வரை போலீஸ் கஸ்டடியில் 275 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் போலீசார்களாலோ, அரசு ஊழியர்களாலோ, ஆயுதப் படையினராலோ, சிறை ஊழியர்களாலோ, காப்பகத்திலோ, மருத்துவமனை அல்லது கஸ்டடிக்காக வைக்கப்படும் இடங்களிலோ பலாத்காரத்திற்கு ஆளாகி இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோல கஸ்டடியில் பலாத்காரம் செய்யப்பட்டதாக 2017ல் 89, 2018ல் 60, 2019ல் 47, 2020ல் 29, 2021ல் 26, 2022ல் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வழக்குகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தாலும் பாதிக்கப்பட்ட அனைவரும் புகார் தர முன்வருவதில்லை என்கின்றனர் மகளிர் உரிமை அமைப்பினர்.இந்திய மக்கள் தொகை அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் பூனம் முத்ரேஜா கூறுகையில், ‘‘கஸ்டடி அமைப்புகள் துஷ்பிரயோகத்திற்கு வாய்ப்புகளை வழங்குகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரிகளால் கட்டாயப்படுத்தவோ மிரட்டப்படவோ செய்கின்றனர். இது அரசின் பாதுகாப்பு என்ற போர்வையில் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதை பிரதிபலிக்கிறது. இதற்கு சட்ட சீர்திருத்தம், சட்ட அமலாக்கத்திற்கான சிறந்த நடைமுறை, பொறுப்புக்கூறலுக்கான வலுவான வழிமுறைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும். தவறு செய்த அதிகாரிகள் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டால் மட்டுமே இதுபோன்ற தவறுகள் இன்னும் குறையும்’’ என்றார்.

The post கடந்த 6 ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் இருந்த 275 பெண்கள் பலாத்காரம்: தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,National Crime Records ,Dinakaran ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி